2/25/2010

Dinamalar News


உணவுப் பொருட்களின் பணவீக்கம் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இதனால், வரும் மாதங்களில் அத்தியாவசிய பண்டங்களின் விலை மேலும் உயரும் என்று மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. தவிர, அபரிமிதமான பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு விட்டதால், ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய அரசு அளித்து வந்த ஊக்குவிப்பு சலுகைகள் சிலவற்றை, மத்திய பட்ஜெட் டில் விலக்கிக் கொள்ள வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. மத்திய அரசின் 2010-11ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று லோக்சபாவில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளாக வீழ்ச்சியடைந்து காணப்பட்டு வந்த பொருளாதார வளர்ச்சி, தற்போது 9 சதவீதமாக உயரும் என எதிர்பார்ப்பு உள்ளது.

இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம், வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைத் துள்ளது. பொருளாதார மந்த நிலையை கருத்தில் கொண்டு, பல்வேறு துறைகளுக்கு தரப் பட்ட ஊக்குவிப்பு நிதி ஒதுக்கீடுகளை மத்திய அரசு அளித்தது. தற்போது, 2009-10ம் ஆண்டின் இரண்டாவது பகுதியில் நாட்டின் தொழில் வளர்ச்சி என்பது 8.2 சதவீதமாக உயரவுள்ளது. சேவைத் தொழில் வளர்ச்சி 8.7 சதவீதமாகவும் உள்ளது. ஆனால், விவசாயத் துறையின் வளர்ச்சி என்பது நெகட் டிவ் வளர்ச்சியாக மைனஸ் 2 சதவீதமாகக் காணப்படுகிறது. இருப்பினும், ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி என்பது 7.2 சதவீதமாக உள்ளது. இதன் காரணமாக, சில துறைகளுக்கு ஏற்கனவே அளித்து வந்த ஊக்குவிப்பு நிதி ஒதுக்கீடு உதவிகளை திரும்ப பெற்றுக் கொள்வதற்கான சாத்தியம் எழுந்துள்ளது. உணவுப் பொருட்களின் பணவீக்கம் என்பது கடந்த ஜனவரி மாதம் 17.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதில் ஆன கால விரயமும் தாமதமுமே. தேவைக்கு தகுந்த சப்ளை இல்லை. ஆயினும், டிசம்பர் மாதம் முதற்கொண்டே பணவீக்கம் உயரத் துவங்கியது. இதன் காரணமாக, வரும் மாதங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இது, அரசுக்கு கவலையளிப்பதாக உள்ளது.

தென்மேற்கு பருவ மழை 1972ம் ஆண்டு தான் மிகவும் குறைவாக பெய்தது. இதற்கு அடுத்து, கடந்த ஆண்டு தான் தென்மேற்கு பருவ மழை மிகவும் குறைவாக பெய்தது. இந்த மழை பெய்வதற்கும் கால தாமதம் ஏற்பட்டது. உணவு தானிய உற்பத்தி என்பது 2009-10ம் ஆண்டு 98.83 மில்லியன் டன்னாக இருக்கும். இது 2008-09ம் ஆண்டைக் காட்டிலும் குறைவாக இருக் கும். உணவு தானிய உற்பத்தியின் நிர்ணய இலக்கு என்பது 125.15 மில்லியன் டன் ஆகும். இதன் காரணமாக அரிசியின் உற்பத்தி 15 சதவீதம் குறையும். பருப்பு உற்பத்தி 32 சதவீதம் குறையும். பருப்பு உற்பத்தி என்பது 4.42 மில்லியன் டன் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இருப்பினும், இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 27 சதவீதம் வரை குறைவு. கரும்பு உற்பத்தி என்பது 249.48 மில்லியன் டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பருத்தி உற்பத்தி 236.57 லட்சம் டன் வரை இருக்கும். ஆயினும், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 19 சதவீதம் இது குறைவு. ஏற்கனவே முடிந்த காரீப் பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்ட நிலப்பரப்பு 6.5 சதவீதம் குறைவாக இருந்தது.

பருப்பு சாகுபடியின் நிலப்பரப்பு 5.63 சதவீதம் குறைவாகவும், எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி சாகுபடி நிலப்பரப்பு 5.15 லட்சம் எக்டேர் வரையிலும் குறைவாக இருந்தது. ஆனால், வரும் ராபி பருவத்தில் கோதுமை, பருப்பு, நிலக்கடலை ஆகியவற்றின் சாகுபடி நிலப்பரப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜனவரி மாத நிலவரப்படி, நாட்டின் உணவு தானிய கையிருப்பு 47.4 மில்லியன் டன் வரை உள்ளது. இதில், அரிசியின் கையிருப்பு 24.3 மில்லியன் டன்னும், கோதுமையின் கையிருப்பு 23.1 மில்லியன் டன் வரையும் உள்ளது. அரிசி, கோதுமை ஆகியவற்றை இறக்குமதி செய்யாமலேயே இருக்கும் கையிருப்பை வைத்துக் கொண்டு, ரேஷன் கடை வினியோகங்களை சமாளித்து விட முடியும்.

ரேஷன் கடைகளின் உணவு தானிய தேவை என்பது 34.8 மில்லியன் டன் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் மின்சார உற்பத்தியை பெருக்கும் நடவடிக்கையாக, 2008-09ம் ஆண்டில் புதிதாக 7 ஆயிரத்து 530 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம் வரைக் கும் 3 ஆயிரத்து 454 மெகா வாட் வரையில் தான் உற்பத்தி செய்ய முடிந்துள்ளது.

இதற்கு போதுமான எண்ணிக்கையில் கட்டுமானப் பொறியாளர்கள் கிடைக்காதது மற்றும் கான்ட்ராக்டர்களுக்கு பணப் பட்டுவாடா நடைபெறுவதில் எழுந்த சிக்கல்களுமே காரணம். கடன் வசதி செய்து தருவதில் தனியார் துறை வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கிகள் ஆகியவற்றைக் காட்டிலும் அரசுத் துறை வங்கிகள் சிறப்பாகவே செயல்படுகின்றன. இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

-நமது டில்லி நிருபர்-

No comments:

Post a Comment

This is the comment Form

Your Ad Here
Your Ad Here
Your Ad Here
Your Ad Here
Your Ad Here